அட்சய திரிதியை வந்துவிட்டது ஒரு குண்டு மணியளவாவது தங்கம் வாங்க வேண்டும் என்று மக்கள் நகைக்கடைகளுக்கு அலைமோதுகின்றனர். காரணம் லட்சுமி தேவி குடியிருக்கும் தங்கத்தை வாங்கினால், வீட்டுக்கு லட்சுமியே வருவாள் என்பதுதான் அவர்களது நம்பிக்கை. லட்சுமி தேவி குடியிருப்பது தங்கத்தில் மட்டுமல்ல உப்பு, அரிசி (அட்சயம்) போன்ற உணவுகளிலும்தான். அட்சய பாத்திரம் போல, அள்ள அள்ளச் செல்வம் பெருக அன்றைய தினத்தில் எளியவர்களுக்கு தானம் செய்வது மிகவும் அவசியம்.தீராத நோயால் அவதிப்படுபவர்கள், உடல் நிலை மோசமானவர்களுக்கு மருந்து வாங்கித் தருவதால், உடல் ஆரோக்கியமாகும்.
புராணங்களில் அட்சய திரிதியை மகத்துவத்தை உணர்த்தும் பல கதைகள் உண்டு.
ஒரு முறை கண்ணனைக் காணவேண்டும் என அவரது சிறுவயது நண்பனான குசேலர் விரும்பினார். ஏழ்மையில் வாடிய குசேலர் ஒரு பிடி அவலை தன் கிழிந்த மேலாடையில் முடிந்துகொண்டு கண்ணனைக் காண அவலுடன் சென்றார். போகும் வழியெல்லாம் தன் ஏழ்மை நிலைக்கு நல்ல வழி காட்டும்படி கண்ணனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே சென்றார். ஆனால் கண்ணனைக் கண்டதும் அவருக்கு உதவிக் கேட்க மனம் வரவில்லை. கண்ணனும் குசேலருக்கு ராஜ உபசாரம் செய்தார். பின்பு தன் நண்பன் கொண்டுவந்த அவலைச் சாப்பிட்டபடி, "அட்சயம்" என்றார். உடனே, குசேலரின் குடிசை மாளிகை ஆனது. குசேலர் "குபேர சம்பத்து" பெற்றார். குசேலருக்கு கண்ணபிரான் அருள் புரிந்த நாள் "அட்சய திரிதியை" நாளாகும்.
ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது முதன்முதலாக தங்கள் வயிற்றுப்பசியை உணர்ந்தனர். அப்போது பகவான் கிருஷ்ணன், அவர்கள் முன்பு தோன்றி உணவளித்தார். பின்பு அள்ள அள்ளக் குறையாது உணவளிக்கும் அட்சய பாத்திரத்தைப் பெறுவதற்கான வழியைப் பஞ்ச பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் கூறினார்.
ராமாயணத்தில் ஸ்ரீராமனுக்குச் சூரிய உபாசனை செய்யும் "ஆதித்ய ஹ்ருதய" மந்திரத்தை உபதேசித்தார் அகத்திய முனிவர். மகா பாரதத்தில், பஞ்ச பாண்டவர்கள் அந்த ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உச்சரித்து கடுந்தவம் புரிந்தனர். தவத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்து சூரியபகவான் அவர்கள் முன்பு தோன்றி , அட்சய பாத்திரத்தை அளித்தார். ஆனால் அட்சய பாத்திரத்தை அன்னத்தாலோ, வேறு உணவு பதார்த்தங்களாலோ நிரப்பினால், அள்ள அள்ளக் குறையாமல் அனைவருக்கும் அது உணவளிக்கும். ஒருவேளை உணவருந்தியபின் எஞ்சியதை சூர்யார்ப்பணம் செய்து, அட்சயப் பாத்திரத்தைக் கழுவிவைத்துவிட்டால், மறுநாள் சூரியோதயத்துக்கு பிறகுதான் அது மீண்டும் உணவளிக்கும். இந்த நியதிகளை விளக்கிவிட்டு மறைந்தார் சூரிய பகவான்.
நாட்டில் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த துரியோதனனோ பாண்டவர்களை அழிக்கும் எண்ணத்தில் மூழ்கியிருந்தான். அந்தச் சமயம் மிகவும் சக்தி வாய்ந்த, துர்வாச முனிவர் துரியோதனனின் அரண்மனைக்கு வந்தார். அவரை அவமதித்தால் சாபம் தந்துவிடுவார் என்று முன்பே அறிந்திருந்த துரியோதனன் அவருக்கு, விருந்தும் தகுந்த மரியாதையையும் அளித்தான். தன்னை கௌரவப் படுத்திய துரியோதனனிடம் "என்ன வரம் வேண்டும் ?"என்று கேட்டார். காட்டில் இருக்கும் பஞ்ச பாண்டவர்கள் கஷ்டப்படும் இந்த வேளையில் இவரை அங்கு அனுப்பி வைத்தால் இவருக்கு விருந்தளிக்கமுடியாமல் சாபத்துக்கு உள்ளாவார்கள். என்ற தீய எண்ணத்தோடு, "மகரிஷியே, எங்களுக்கு எதுவும் வேண்டாம். உங்கள் ஆசீர்வாதமே போதும். இதே போல காட்டில் இருக்கும் பஞ்ச பாண்டவர்களிடம் சென்று உணவருந்திவிட்டு அவர்களையும் வாழ்த்துங்கள்" என்றான் .
அப்படியே ஆகட்டும் என்று முனிவரும் பஞ்ச பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று, "எனக்கு மிகுந்த பசி, நான் சென்று ஆற்றில் குளித்துவிட்டு வருகின்றேன், உணவைத் தயார் செய்யுங்கள்" என்று கூறிவிட்டு ஆற்றங்கரைக்குச் சென்றார்.ஆனால் அப்போதுதான் பாண்டவர்கள் பகல் பொழுது உணவை முடித்து விட்டிருந்தனர். திரௌபதி அட்சயப் பாத்திரத்தைக் கழுவும் முன்பு சூர்யார்ப்பண மந்திரத்தையும் சொல்லிவிட்டாள். செய்வதறியாது தங்களைக் காக்கும்படி பகவான் கிருஷ்ணனை அழைத்தனர்.கிருஷ்ணனும் அட்சய பாத்திரத்தில் ஓர் அன்னப்பருக்கையும், கீரை இலையும் ஒட்டிக்கொண்டிருந்ததைக் கண்டார். அந்த அன்னப்பருக்கையை எடுத்து நாக்கில் வைத்து விழுங்கினார். 'அட்சயம்’ என்றும் கூறினார்.
என்ன ஆச்சர்யம், நதியில் நீராடிக் கொண்டிருந்த துர்வாசருக்கும், அவரின் சீடர்களுக்கும் பத்து நாள் உணவை ஒரே நாளில் சாப்பிட்டது போல் வயிறு கனத்தது. பஞ்ச பாண்டவர்களிடம் சென்று, "இப்போது என் வயிறு கனக்கிறது. என் சீடர்களும் அப்படியே உணர்ந்து கூறினார்கள். எங்களை மன்னித்துவிடு. உனக்குச் சர்வ மங்கலமும் உண்டாகட்டும்'' என்று வாழ்த்தி, தமது சீடர்களுடன் சென்றார்.
அட்சயம் என்னும் இந்த ஒரு வார்த்தைக்கு எத்தனை மகிமை என்று பார்த்தீர்களா ..?
ஆக அட்சய திரிதியை அன்று, தானம் தருமங்கள் செய்து திருமகள் மட்டுமல்லாது திருமாலையும் சேர்த்து வணங்குவோமாக.
Source: http://www.vikatan.com/news/spirituality/87880-what-is-the-real-story-behind-akshaya-tritiya.html
No comments:
Post a Comment